Share via:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளையராஜா தடுக்கப்பட்ட விவகாரம் தமிழகம்
முழுக்க தீயாகப் பரவி, அதனை இளையராஜாவே விளக்கம் சொல்லி தடுத்து நிறுத்திவிட்டார்.
ஒரு நாள் கழித்து திடீரென இளையராஜாவுக்காக சீமான் தீவிரமாக களம் இறங்கி, ஜீயர் மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதன் பின்னே அரசியல் இருக்கிறது என்று
உடன்பிறப்புகள் வம்பிழுக்கிறார்கள்.
இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’திருவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த
மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழின மூதாதை
எங்கள் குலமகள் ஆண்டாள் பெருமாட்டியை வழிபடச் சென்ற ஐயா இளையராஜா அவர்களை அவமரியாதை
செய்த திருவில்லிபுத்தூர் ஜீயரின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்தைத் தாழ்த்தும்
கொடுஞ்செயலாகும். இதனை இனமானத்தமிழர்கள் ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள்.
தன் ஈடு இணையற்ற இசையால் தமிழர்களின் வணக்கத்திற்குரியவரான இளையராஜாவை,
ஆண்டாளின் மகனான இளையராஜாவை வழிபடத் தடுக்கும் உரிமை யாருக்குமில்லை. ஏழாம் நூற்றாண்டில்
வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆண்டாள் தமிழின முன்னோர்; அவர் பாடிய திருப்பாவையும், நாச்சியார்
திருமொழியும் தமிழிலேயேதான் இருக்கின்றன. அவரது வழிபாட்டுத்தலத்தில் தமிழில் ஓதுவதையும்,
தமிழர்கள் வழிபாடு செய்வதையும் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரிசாவிலுள்ள பூரி
ஜெகன்நாதர் கோயிலின் கருவறையருகே அனுமதிக்கப்படாததுபோல, இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள்
திருவில்லிபுத்தூர் கோயிலின் கருவறையருகே இருந்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாதது
ஏற்கவே முடியாத கொடிய சனாதனமாகும். ஐயா இளையராஜாவுக்கும், ஆண்டாள் கோயிலை கட்டிய தமிழின
முன்னோன் மாமன்னர் கோனேரிமை கொண்டான் குலசேகர பாண்டியனுக்கும்தான் தொடர்பு உண்டே தவிர,
ஐயா இளையராஜாவைக் கருவறைக்குள் நுழையாதே என்றுச்சொல்லும் ஜீயர்களுக்கும் ஆண்டாள் கோயிலுக்கும்
என்ன தொடர்பு இருக்கிறது?
சமத்துவம், சமூக நீதி, சமதர்மம் என்றெல்லாம் பேசி வரும் திமுகவின்
ஆட்சியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களிலே சமத்துவமின்மையும், சனாதனக்கொடுமைகளும்
நிகழ்ந்தேறுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கத்தில் பெரியார் கோயில் நுழைவுப்போராட்டம்
நடத்தியதாகக் கூறிப் பெருமிதம் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தம்முடைய ஆட்சியில்
ஐயா இளையராஜா கருவறைக்கு அருகேயுள்ள மண்டபத்துக்குள்ளேயே நுழைய முடியாதது வெட்கக்கேடானதாகும்.
ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதியதற்காக முத்தமிழ்ப்பேரறிஞர் ஐயா
வைரமுத்து அவர்களுக்கெதிராக அடாவடித்தனம் செய்த திருவில்லிபுத்தூர் ஜீயருக்கு ஆதரவாக
நாணமின்றி நின்ற திமுக, இன்றைக்கு யார் பக்கம் நிற்கப் போகிறது? ஐயா இளையராஜாவின் பக்கமா?
திருவில்லிபுத்தூர் ஜீயர் பக்கமா? ஜீயர்களுக்கு பாதப்பூஜை செய்து பரிகாரம் தேடும் திமுகவின்
தலைவர் பெருமக்கள் ஐயா இளையராஜாவுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளாது
இருப்பார்கள் என்றால், அதைப் போல ஒரு இழிநிலை வேறுண்டா? ஆண்டாள் கோயில் மரபுப்படி,
வழக்கப்படி தான், ஐயா இளையராஜா வெளியேற்றப்பட்டார் என்று தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையே
கூறுவது பெருங்கொடுமையாகும். அந்த மரபையும், பழக்கத்தையும் உருவாக்கியர்கள் யார்? ஆகமவிதி
என்று பாஜக கூறுவதற்கும், மரபு – பழக்கம் என்று திமுக கூறுவதற்கும் என்ன வேறுபாடு உள்ளது?
ஆகம விதி, மரபு, பழக்கம் என்பதெல்லாம் தமிழர்களை வெளியேற்ற நடக்கும்
சதியேயாகும். ஆண்டாள் கோயில் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானதே அன்றி, ஐயா இளையராஜாவை
வெளியேற சொல்பவர்களுக்கும் ஆண்டாள் கோயிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இசையாகவே வாழும்
ஐயா இளையராஜா அவர்கள் கருவறைக்குள் நுழைவதைத் தடுப்பதை அந்த இறைவனே விரும்பமாட்டார்.
எனவே, தமிழ் மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற தமிழ்ப்பெரும் கலை அடையாளம்,
இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு அருகேயிருந்த மண்டபத்திலிருந்து வெளியேறச்
செய்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பா.ஜ.க. சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் தீர்மானம் நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட இருக்கிறது. அதனை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே முடிந்துபோன இளையராஜா
விவகாரத்தை மீண்டும் எழுப்புகிறார் சீமான் என்று தி.மு.க.வினர் பதிலடி கொடுக்கிறார்கள்.