Share via:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளில் 159 இடங்களை கைப்பற்றிய தி.மு.க. ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தாங்கள் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வகையில ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்துவைத்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து காலி என்று அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.
இந்நிலையில் 75 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள பிற மாநில சட்டசபை தேர்தல்களோடு சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையடுத்து ஒரே தொகுதியில் 2 இடைத்தேர்தலை சந்தித்த தொகுதி ஈரோடு கிழக்கு தொகுதி என்று பெயர் பெற்றுள்ளது. எனவே அத்தொகுதி மக்கள் 3வது முறையாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.