Share via:
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷா உடலை மாபெரும் போலீஸ் பாதுகாப்புடன்
அடக்கம் செய்த விவகாரத்தை பா.ஜ.க. தீவிரமாக எடுத்து போராடி வருகிறது. பாஷா எனும் தீவிரவாதியை
தியாகியாக மாற்றும் போக்குக்கு எதிராக கோவையில் திமுக அரசைக் கண்டித்து கருப்பு தின
பேரணியில் கலந்துகொண்டார் அண்ணாமலை.
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற
கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது
திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில்,
கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த
தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர்
அலுவலகமும் ஒன்று. இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக
திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது.
கடந்த 1998 ஆம் ஆண்டு, 58 உயிர்கள் பலியான கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போதும்,
திமுக ஆட்சிதான். திமுக அரசு நினைத்திருந்தால், அந்த குண்டுவெடிப்பையும் தடுத்திருக்க
முடியும். அத்தனை உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் காப்பாற்றியிருக்க முடியும்.
ஆனால், திமுக, வாக்கு அரசியலுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தீவிரவாதச்
செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதியின் உடலை, ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறது
அதே திமுக அரசு. திமுக மட்டுமல்ல, அண்ணன் சீமான், அண்ணன் திருமாவளவன் ஆகியோரும், வாக்கு
அரசியலுக்காக, தீவிரவாதிக்கு இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்..’’ என்று பேசினார்.
காவல் துறை அனுமதியின்றி நடைபெற்ற பேரணி என்பதால் அண்ணாமலை உள்ளிட்ட
தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அண்ணாமலை கைதுக்கு தி.மு.க. மன்னிப்பு
கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் ரகளை செய்துவருகிறார்கள்.
கோவையில் மீண்டும் ஒரு மதக்கலவரத்தை உருவாக்க அண்ணாமலை திட்டமிடுவதாக
தி.மு.க.வின் ராஜீவ்காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். அவர், ‘’தமிழ்நாட்டில் கல்வி
மற்றும் மருத்துவ வளர்ச்சியில் தென் இந்தியாவின் சிறந்த ஊர் கோவை கடந்த காலத்தில் தலைவர்
கலைஞர் அவர்கள் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து ஐடி நிறுவனங்களை
கொண்டுவந்து கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டார்!. தற்போதைய முதலமைச்சர் எங்கள் தலைவர்
அவர்கள் பல புதிய பன்னாட்டு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் புதிய பன்னாட்டு தொழில் வாய்ப்புகளை
கொண்டு வந்துள்ளார்கள்!.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாது சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு
ஜிஎஸ்டி வரி விதித்து தொழில் வாய்ப்புகளை தடுக்கும் மோடி அரசு சமீப நாட்களாக அண்ணாமலை
அவர்களை வைத்து மத கலவரங்களை தூண்டி சமூக பதற்றத்தை ஏற்படுத்தி யாரையும் கோவையினை நோக்கி
தொழில் செய்ய வரவிடக்கூடாது என எண்ணுகிறது!! அண்ணாமலை அவர்களின் சமீபகால நடவடிக்கை
மற்றும் மத வெறுப்பு பிரச்சாரம் எல்லாம் பார்க்கிற போது கோவையில் சமூக பதற்றம் நிழவுவது
போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த முயல்கிறார். நிம்மதியாக வாழும் கோவை மக்களிடம் விஷத்தை
விதைக்கும் கலவர புத்தியை அண்ணாமலை கைவிட வேண்டும்’’ என்று கோபத்தைக் கொட்டியுள்ளார்.
கலவரத்தை தூண்டிவிட்றாதீங்கப்பா…