Share via:
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் தொடர்ந்து தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இதன்தொடர்ச்சியாக கடந்த மே மாதம் காரில் 2.5 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சவுக்குசங்கர் உதவியாளர் ராம்பிரபு, ராஜரத்தினம், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசிய குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது குறிப்பிடத்தக்கது. பல மாதங்கள் கழித்து சிறையில் இருந்து சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அவர், விசாரணையின் போது ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர் மனுவாக அளித்திருந்த நிலையிலும், நீதிபதி செங்கமலச்செல்வன் அதனை ஏற்க மறுத்தார். அதோடு சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்டும் பிறப்பித்து இவ்வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சென்னையில் சவுக்கு சங்கரை தேனி மாவட்ட போலீசார் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சவுக்குசங்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குற்றம் தான் என்றும் அவர் மீதான கைது நடவடிக்கை சரியானதுதான் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மறுபுறம் சவுக்குசங்கர் மீதான அடக்குமுறை மீண்டும் தொடர்ந்துள்ளது என்று அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.