Share via:
இறந்த தலைவர்களின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்துவது வழக்கமான
நிகழ்வு. ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு
பிரேமலதா திட்டமிட்டு செயல்படுவதாக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும்,
முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற
28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை குரு பூஜையாகக் கொண்டாட பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய பிரேமலதா விஜய்காந்த்,
‘’கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க
விரும்புகிறோம். இதற்காக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து
கட்சிகளுக்கும் நேரில் அழைப்பு வழங்க உள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார். இதனால்
அத்தனை கட்சிகளும் கலந்துகொள்வார்கள்’ என்று கூறினார்.
இந்த நிலையில் குரு பூஜைக்கான அழைப்பிதழை எல்.கே.சுதீஷ், விஜய்பிரபாகரன்
ஆகியோர் இன்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம்
வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடி
பழனிசாமிக்கு முதல் அழைப்பு கொடுத்து அதனை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள். முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமிக்கு
அழைப்பிதழ் கொடுத்ததாக இருந்தாலும் அதனை வெளியிடாமல் பன்னீருக்குக் கொடுத்ததை வெளியிட்டது
ஏன் என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமையும் என்று பேசிவருகிறார்
எடப்பாடி பழனிசாமி. இப்போது அவர் கைவசம் இருப்பது பிரேமலதா கட்சி மட்டும் தான். அந்த
கட்சியும் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கு ஆர்வம் காட்டுவது போன்று இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.
கேப்டனின் குரு புஜை நிகழ்வு இப்போதே எக்குத்தப்பாக மாறியிருக்கிறது.