Share via:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற நுழைவுவாயிலில் இளைஞர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நீதிமன்றத்திற்கு தினந்தோறும் பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரும் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தார்.
மாயாண்டியை நோட்டமிட்ட 4பேர் மர்ம கும்பல், திடீரென்று அவரை சுற்றி வளைத்தது. இதில் பயந்துபோன அவர் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற நுழைவுவாயிலுக்குள் சென்றார். இருந்தாலும் அந்த கும்பல் எந்த அச்சமும் இல்லாமல், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால், மாயாண்டியின் கை, கால் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியது.
இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை உறுதி செய்த அந்த மர்ம நபர்கள், உடனடியாக தாங்கள் முன்பு வந்திறங்கிய காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து மாயாண்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் 4 பேரை கைது செய்த நிலையில் அடுத்த ஒரு மணிநேரத்தில் 3 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மாயாண்டியை கொலைக்கு பழிவாங்குவதற்காக படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
நீதி கேட்டு வருபவர்களின் நம்பிக்கையே நீதிமன்றம்தான். அப்படிப்பட்ட நீதிமன்ற வாசலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசின் மீதும், தமிழக போலீசார் மீதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.