Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருந்துகொண்டே தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுத்துவந்த
ஆதவ் அர்ஜுனாவை இப்போது தான் வெளியே அனுப்பினார் திருமாவளவன். இனிமேல் கூட்டணிக்கு
எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிம்மதிப்
பெருமூச்சு விடுவதற்குள் வன்னியரசு அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார்.
தி.மு.க. அரசில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டை
இலக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் 25 தொகுதிகள் கேட்போம் என்று
கேட்ட விவகாரம் படு வைரலாகியுள்ளது. திருமாவளவன் அனுமதியின்றி இப்படி பேசியிருக்க மாட்டார்
என்பதால் தி.மு.க.வினர் கடுமையாக கிண்டல் செய்து வெளியே அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் நின்று விடுதலைச் சிறுத்தைகள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையைப்
போட்டு அவமானப்படுத்துகிறார்கள். தனித்து நின்றால் சீமான் வாங்கும் அளவுக்குக் கூட
வாக்குகள் இல்லாத ஒரு கட்சிக்கு 25 சீட் போதுமா..? வெளியே போவது என்று முடிவு செய்துவிட்டால்
இன்னும் கூடுதலாகக் கேட்கலாமே என்று கேலி செய்கிறார்கள்.
கடந்த முறை இருந்த கூட்டணியில் இப்போது கமல்ஹாசன் கட்சியும் இணைந்துள்ளது. கருணாஸ்
கட்சியும் உள்ளே வந்திருக்கிறது. இவர்களுக்குக் கொடுக்கும் சீட் எல்லாமே விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியிடம் இருந்தே புடுங்க வேண்டும். அதிகப் பேச்சு அரசியலுக்கு ஆகாது
என்கிறார்கள். வீராவேசமாக 25 சீட் கேட்ட விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க.வினரின் கோபத்தைக்
கண்டு அடங்கிக் கிடக்கிறார்கள்.
இந்த விவகாரம் வில்லங்கமாகிவிடக் கூடாது என்பதற்காக, ’25 தொகுதிகள் வேண்டும் என்று
கேட்டது வன்னியரசுவின் தனிப்பட்ட கருத்து’ என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார் திருமாவளவன்.