Share via:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வருகிற 10, 11, 12, மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து அனைவரும் சென்னை திரும்ப வசதியாக 15ந்தேதி முதல் 19ம் தேதிவரை 15,800 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி சென்னையில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இத்தகவல் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.