Share via:
தென்மாவட்ட மக்களின்
வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறைக்கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வந்த திட்டமான மதுரையில் இருந்து
அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயில்பாதை திட்டத்தை வேண்டாம் என்று
தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு
தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎஃப் ரயில்
பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட
ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி
வைஷ்ணவ், ‘’தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில்
பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டம்
வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது’’ என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை,
‘’மத்திய அரசின் தூத்துக்குடி – மதுரை அகல ரயில் பாதையை தங்களுக்கு
வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த மாநில அரசு. ஏன் என்ற காரணத்தை பொதுமக்களுக்கு
சொல்வார்களா?
நமது மாண்புமிகு
பாரதப் பிரதமர் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில்
முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள
திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே,
அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின்
காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி, நேற்று ஊடகங்களில்
தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு
ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே,
திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது மாண்புமிகு ரயில்வே அமைச்சர்
அவர்கள் கூறியிருந்தார். அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய
ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும்
74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு,
இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும்
ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக
அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம்
நடத்தவிருக்கிறோம்.’’ என்று தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் தி.மு.க.வினர்,
‘’நிலம் முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒன்றிய அரசு நிலம் கையகப்படுத்தியதற்கு
உரிய பணம் தராமல் இழுத்தடிப்பு செய்துவிட்டு தி.மு.க. மீது பழி போடுகிறார்கள். அந்த
கடிதத்தை அமைச்சர் வெளியிட வேண்டும்’’ என்று குரல் கொடுக்கிறார்கள். அதோடு, ‘நாங்க
ரயிலுக்கு இடத்தை பிடிச்சுக் கொடுப்போம், நீங்க நோகாம அதை அதானிக்குக் குடுத்துட்டுப்
போயிடுவீங்க’’ என்றும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.