Share via:
இன்று கவர்னர் உரைக்கு
நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து
பேசியபோது, கவர்னர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறார். அரசால் தயாரிக்கப்படும்
உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை; ஆனால் திட்டமிட்டு விதிமீறல்
செய்வதில் தான், ஆளுநர் குறியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
அதோடு, முதல் ஆண்டு
திராவிட அரசு எழுதிக்கொடுத்த உரையை முழுமையாகப் படித்தார். அதன் பிறகு வேண்டுமென்றே
ஏதேனும் இடையூறு செய்துவருகிறார். சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில்
தேசியகீதமும் இசைப்பது தான் மரபு. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது
என்று கொதித்தார்.
இந்த நிலையில் தி.மு.க.
எம்.எல்.ஏ.வான எழிலன், ‘’சென்னையில் மான்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க ஆளுநர் இல்லத்தை
மாற்ற வேண்டும். அவருக்கு அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் இல்லம் ஒதுக்கி
தர வேண்டும்’’ என்று எழுப்பிய கோரிக்கை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எப்படியாவது
கவர்னரை ராஜ் பவனில் இருந்து வெளியேற்றி சாதாரண குடியிருப்புக்கு மாற்ற வேண்டும் என்று
பலரும் கோரிக்கை வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இது குறித்துப்
பேசும் அ.தி.மு.க.வினர், ‘’கவர்னர் மாளிகை மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஸ்டாலினுக்குத்
தைரியம் கிடையாது. கவர்னரும் ஸ்டாலினும் பேசி வைத்துக்கொண்டு சண்டை போடுகிறார்கள்.
டீ பார்ட்டியிலே இவர்களுடைய கள்ள உறவு வெளியே வந்துவிட்டது’’ என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்
ஜெய்சுகின் என்பவர் புதிய ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘’தமிழ்நாடு
ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக
செயல்படுகிறார். மாநில அரசோ அல்லது மக்களோ ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்தால் அதனை
நிராகரிக்கிறார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்,
இழுத்தடிப்பு செய்து வருகிறார். அவர் தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற மறுத்து
வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்கள் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றதாக உள்ளது.
ஆளுநர் பொறுப்பில் இருக்கும் அவர் அந்த பதவியில் விருப்பமின்றி செயல்படுவதுபோல் தெரிகிறது.
தமிழ்நாடு ஆளுநராக
செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம்
தேடும் நோக்கத்திலேயே ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு
அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் ஆர்.என்.ரவி அவ்வாறு நடந்து கொள்வது கிடையாது.
ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தை கடந்து அவர் செயல்படக் கூடாது என்பதை
அவர் துளி அளவும் கருதவில்லை. எனவே அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான உரிய உத்தரவை
குரியரசு தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவைக்கு பரிந்துரையுடன்
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில்
விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது.