Share via:
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று
பொய்யாகப் பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்து தி.மு.க. ஏமாற்றிவிட்டது என்று
த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து பரந்தூர்
விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
விஜய் முதல் டூர் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘’எத்தனைக் காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய
தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள்
அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும்
மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப்
பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது,
நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின்
போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை
ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை
நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும்
அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று
தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி,
தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி
வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை…’’ என்று கடுமை காட்டியிருந்தார்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’நீட்தேர்வுக்கு கையிழுத்திட்டவர் மாஃபா
பாண்டியராஜன். நீட் விவாதம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வந்த போது தலை தெறிக்க
ஓடியது அதிமுக. ஒன்றிய அரசு 2024 இல் நீட் விலக்கு தர மாட்டேன் என்கிறது . திமுகவை
குறைகூறுவதற்கு முன் விஜய் இதை சுட்டிக்காட்டியிருக்கலாம் ஆனால் அவருக்கு இதெல்லாம்
தெரியுமா என கூட தெரியாது . ஒன்றுக்கு இரண்டுமுறை நீட் விலக்கு மசோதவை திமுக அரசு நிறைவேற்றியது
. திமுக எம். பி வில்சன் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தார். உச்ச நீதிமன்றத்தில் திமுக
வழக்கு தொடுத்துள்ளது ஒன்றரை கோடி கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக வாங்கியது திமுக
பனையூர் பண்ணையாரே நீட் தேர்வுக்கு எதிராக நீ என்ன செய்தாய் ?’’ என்று எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் விமானநிலையம் அமைய உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்
கிராமம் சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து கலந்துரையாடுவதற்கு
போலீஸ் பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் மாவட்டம் கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு
அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேலூருக்கு சென்று டங்ஸ்டன் போராட்டத்துக்கும் ஆதரவு அளிப்பார் என்று சொல்லப்படுகிறது.
முதல் அரசியல் பயணமான பரந்தூரில் மாஸ் காட்ட வேண்டும் என்று விஜய்
ரசிகர்கள் இப்போதே துடியாய் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.