Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு,
‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு
கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு
(விஜயோடு) மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் தலைவர் திருமாவளவன் சொன்னார்’
என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஒரு கடுமையான வாதத்தை முன்வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். பாலாஜி
இன்று, ‘’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை
உலுக்கி நிலைகுலைய செய்ய முடியும்’’ என்று ஒரு வரி தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் நேரடியாக ஆதவ் அர்ஜுனாவை குறி
வைத்து எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிவிட்டதால் அவர் இன்று கட்சியில் இருந்து வெளியேறுவாரா
அல்லது வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய
நிர்வாகி ஒருவர், ‘’தி.மு.க. கூட்டணியில் இருந்து எப்படியாவது விடுதலை சிறுத்தைகள்
கட்சியை நகர்த்திவிட வேண்டும் என்பதற்காக கட்சிக்குள் நுழைந்தவர் ஆதவ் அர்ஜுனா என்பதை
நாங்கள் முன்கூட்டியே கூறியபோது திருமாவளவன் நம்பவில்லை. விஜய் புத்தக வெளியீட்டு விழா
விவகாரத்தில் அது வில்லங்கமாக வெடித்துவிட்டது.
கட்டுக்கோப்பாக இருந்த கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கியதும்,
ஆளும் கட்சிக்கு எதிராக மதுவிலக்கு மாநாடு நடத்த வேண்டும் என்று தூண்டிவிட்டதும் அவரே.
சமீபத்திய புயல் வெள்ள நேரத்தில் தி.மு.க. தலைவர்கள் களத்தில் நிற்கும் நேரத்திலும்
அரசை எதிர்த்து குரல் எழுப்பினார். இதை எல்லாம், ‘எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது’
என்று சொல்லி திருமாவளவன் தப்பித்துக் கொண்டிருந்தார். ஆனால், இனியும் அப்படி சொல்லிக்கொண்டிருக்க
முடியாது.
இன்று ஒரு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு திருமாவளவன் வந்திருக்கிறார்.
விழாவில் திருமாவளவனுக்கு ஏற்படுத்திய இடையூறுகளுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியில்லை என்றால் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து
வெளியேற்றப்படுவது நிச்சயம்’’ என்கிறார்கள்.
இன்று திருமாவளவன் கடுமையாக கடிதம் எழுதியிருக்கும் நிலையில் தொடர்ந்து
பயணிக்க முடியாது என்பதை ஆதவ் உணர்ந்திருப்பார். ஆகவே, மாலைக்குள் அவராகவே கட்சியில்
இருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிடுவார் என்கிறார்கள். மாலையில் ஒரு சலசலப்பு காத்திருக்கிறது.