Share via:
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் புகுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு, மாடு, பயிர்கள் என சேதம் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்புப்பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் போதாது. குடும்ப அட்டைக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியாக அக்டோபரில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.944 கோடி வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசுக்கு, மத்திய அரசு எந்த குறையும் வைக்காமல் நிதி உதவி வழங்கி வருகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இதற்கிடையில் மத்திய அரசிடம் தமிழக அரசு பெஞ்சல் நிவாரணத் தொகையாக ரூ.2 ஆயிரம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.