Share via:
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
புயல் வெள்ளத்தால் உயிரிழப்பு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களின் பயிர்கள் சேதம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வானிலை மையமே பெஞ்சல் புயலின் தாக்கத்தை கணிக்க முடியாமல் போனது. சென்னையை பொறுத்தவரைக்கும் கனமழை பெய்த நிலையில் 12 மணிநேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.
அதன்படி கடந்த 3 நாட்களில் சென்னையில் 13 செ.மீட்டர் மழை பெய்து முற்றிலுமாக ஸ்தம்பித்தாலும், 12 மணிநேரங்களில் இயல்பு நிலை திரும்பியது. இதற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து 5 முறை முன்னெச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகுதான் படிப்படியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெளியேற்றப்பட்டது. உரிய முன்னெச்சரிக்கையுடன் தண்ணீர் திறந்து விடப்பட்டதால்தான் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பேசினார்.
மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும்போது, அவர் வாய்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து தமிழக அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும் என்று தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் 2 நாட்களில் அப்பகுதி சரி செய்யப்படும். மேலும் திருவண்ணாமலையில் இம்மாதம் (டிசம்பர் 13) கார்த்திகை மகாதீபத்திருவிழா எப்போதும் போல் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.