Share via:
வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி
பழனிசாமி கள ஆய்வுக் குழு அமைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல்
சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை,
வளர்மதி, வரகூர் அருணாசலம் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக்குழு தொடர்து சொதப்பி வருவதாக
நிர்வாகிகள் கவலைப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ‘’தி.மு.க.வில் ஸ்டாலின் தலைமையில்
நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுவினர் இப்போதே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
துண்டுப் பிரசுரங்கள் – திண்ணைப்
பிரச்சாரங்கள் என இறங்கிவிட்டார்கள். அங்கு உதயநிதி, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா
போன்ற இளம் தலைவர்களையும் களத்தில் இறக்கியுள்ளனர்.
ஆனால், எடப்பாடி
பழனிசாமி நியமித்துள்ள குழுவில் எல்லோரும் முதியவர்கள். இவர்களிடம் ஒவ்வொரு
மாவட்டத்திலும், தொகுதியிலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களின்
செயல்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு,
பலவீனமாக உள்ள தொகுதிகள், கட்சி பலவீனமானதற்கு காரணம், மக்கள் மற்றும் தொண்டர்களின்
அதிருப்திக்கு ஆளான நிர்வாகிகள், அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரித்து
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால், அவர்கள் யாரும் உருப்படியாக வேலை செய்வதாகத் தெரியவில்லை.
தங்கமணி பொதுக்கூட்டத்திலே, ‘’நாம ஒருங்கிணைந்து வேலை செய்யலைன்னா இப்படியே எதிர்க்
கட்சியா இருக்க வேண்டியது தான் என்கிறார். திண்டுக்கல் சீனிவாசனோ, ‘கூட்டணிக்கு வருபவர்கள்
50 கோடி, 100 கோடி கேட்கிறார்கள்’ என்று போட்டு உடைக்கிறார்.
கிருஷ்ணகிரியில் கூட்டம் போட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,
‘நம்ம மாவட்டத்துல உறுப்பினர் அட்டை கொடுக்கறது மட்டும் கொஞ்சம் தாமதமாகுது. மத்தபடி
இங்க எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று அவரே ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும் என்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துக்
கூறியிருக்கிறோம்.
அப்போது அவர், ‘’இந்த சீனியர்கள் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை
செய்யட்டும். வேறு ஒரு டீம் ரகசியமாக களத்தில் வேலை செய்துவருகிறது. அந்த குழுவின் ஆலோசனைப்படியே நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்பிக்கையுடன் இருங்கள்’’ என்று உறுதி கொடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள். சீனியர்களுக்கே
தெரியாமல் சீக்ரெட் டீமா என்று கட்சிக்குள் கசமுசா நடக்கிறது.