Share via:
எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வின்
சார்பில் தேர்தல் கள ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலிக்
கூட்டத்துக்கு வந்த எஸ்.பி.வேலுமணி ரகசியமாக நயினார் நாகேந்திரனை சந்தித்து கூட்டணி
குறித்துப் பேசியதாக செய்திகள் வந்தன. எடப்பாடிக்குத் துரோகம் செய்கிறா எஸ்.பி.வேலுமணி
என்று கட்சிக்குள் கடும் கொந்தளிப்பு நிலவியது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.வேலுமணி, ‘’நேற்று திருநெல்வேலி
மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை,
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண
அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை,
இன்றைய தினமலர் நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார்
அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும்
கிடையாது. இந்நிலையில் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து
வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியாவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்று கண்டனம்
தெரிவிக்கிறார்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுப்பார் என்று
தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியதற்கு
நடவடிக்கை எடுத்தது போல் வேலுமணி மீதும் நடவடிக்கை பாயவேண்டும் என்கிறார்கள். .