Share via:
என்னை யாராவது சங்கீ என்று சொன்னால் செருப்பைக் கழட்டி அடிப்பேன்
என்று சொன்ன நாம் தமிழர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துத் திரும்பியதும், ‘சங்கீ
என்றால் நண்பன் என்று அர்த்தம் சொன்னதையும் முடிச்சுப் போடுகிறது மீடியா. வரும்
2026 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக சீமானைப் பயணிக்க வைக்கும்
முயற்சி நடப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
அதேநேரம் இது சாதாரண சந்திப்பு என்கிறது நாம் தமிழர் டீம். இது
சாதாரண சந்திப்பு என்றால் அங்கே ரவீந்திரன் துரைசாமி எதற்காக வந்தார்..? நாம் தமிழர்
தம்பிகள் யாரும் ஏன் அந்த சந்திப்பில் இடம் பெறவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பா.ஜ.க.வின் பி டீம் சீமான் என்று இந்த சந்திப்பு உறுதிபடுத்துகிறது என்று பேச்சு பலமாக
எழுப்பப்படுவதால், நாம் தமிழர் சார்பில் இடும்பாவனம் கார்த்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில், ‘’’வேட்டையன்’ படத்துக்கு வாழ்த்தறிக்கை வழங்கினார் அண்ணன்
சீமான். பதிலுக்கு அண்ணன் சீமான் அவர்களுக்கு அலைபேசியில் நன்றிகூறினார் ஐயா ரஜினிகாந்த்.
பிறகு, அண்ணன் சீமான் அவர்களைச் சந்திக்க விருப்பப்பட்டார் ரஜினிகாந்த். அண்ணன் சீமான்
அவர்களின் தொடர் நிகழ்வுகள், சுற்றுப்பயணங்கள், ரஜினிகாந்தின் படப்பிடிப்பு என இருவருக்கும்
நேர நெருக்கடி இருக்கவே, 10 நாட்களுக்கு முன்பே நடக்க வேண்டிய சந்திப்பு தள்ளிப்போனது.
நவம்பர் 8 அன்றே நடக்க வேண்டிய சந்திப்பு இது. அன்று அண்ணன் பிறந்த நாள் என்பதால்,
நேரமின்மை காரணமாக நடக்கவில்லை. அந்தச் சந்திப்புதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 2.30 மணி நேரம் நிகழ்ந்த இச்சந்திப்பில்,
நாட்டு நடப்புகள், திரைத்துறை, சமூக அவலங்கள், அரசியல் சூழல்கள் என யாவும் பேசப்பட்டிருக்கின்றன.
இச்சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், சந்திப்புக்கு அரசியல் நோக்கம்
ஏதுமில்லை. மொத்தத்தில், எவ்வித இலாப நட்டக்கணக்கும், அரசியல் ஆதாய நோக்கமுமற்ற மிக
இயல்பான சந்திப்பு! இச்சந்திப்புக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடுகளிலும்,
கோட்பாடுகளிலும் மாற்றம் இருக்கப் போவதுமில்லை. ஐயா ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பக்கம்
திரும்பப் போவதுமில்லை. அண்ணன் சீமான் தனது அரசியல் பணிகளை வழக்கம்போல தொடர்கிறார்.
அவ்வளவுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இப்போது நடிகை விஜயலட்சுமியும் வீடியோ போட்டு ரஜினி சந்திப்புக்கு
எச்சரிக்கை கொடுத்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை சந்தித்து பரபரப்பூட்டிய
சீமான் இப்போது ரஜினியை சந்தித்திருக்கிறார். இரண்டுமே ஆதாயம் என்று விஜய் கட்சியினர்
வெளுத்து வாங்குகிறார்கள்.