Share via:
இன்று அண்ணா தி.மு.க.
சார்பில் புரட்சித்தலைவியின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தினை
திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை எடப்பாடி
பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். இது இணைப்புக்கு பச்சைக் கொடியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா திமுக வின்
பெருமை மிகு அடையாளமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை 1950களில் அதாவது புரட்சித்தலைவர்
அரசியலுக்கு வருவதற்கு முன்பு வி.என்.ஜானகியின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது ஆகும்.
அவர் தானமாக எழுதிக் கொடுத்த இடமே இன்றைய எம்.ஜி.ஆர். மாளிகை.
புரட்சித்தலைவரின்
கண்ணுக்கு இமையாக வாழ்ந்துவந்த ஜானகியம்மையார், எம்.ஜி.ஆர். திடீர் மரணத்தில்
நொறுங்கிப் போனார். ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டு முக்கியத் தலைவர்கள் இணைந்து
ஜானகியம்மாளை முதல்வராக அமரவைப்பது என்று முடிவு எடுத்தார்கள். அப்போது அவர் பதவியை
ஏற்க மறுத்தார். ஆனாலும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தியே
அவரை பதவியில் அமர்த்தினார்கள். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர், தமிழ்நாட்டின்
11வது முதல்வர், இந்தியாவின் 5வது பெண் முதல்வர் என்றெல்லாம் பெருமைகள் கிடைத்தன. ஆனால்,
குறுகிய காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது.
1989ம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டு சட்டமன்றத்
தேர்தலை சந்தித்த காரணத்தால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க. மீண்டும்
ஜெயிக்க வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்று பல தலைவர்கள் கோரிக்கை
வைத்தார்கள்.
புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற
நல்லெண்ணத்தில் கட்சி நிதி, அறக்கட்டளை நிதி போன்ற அத்தனை சொத்துக்களயும் புரட்சித்தலைவியிடம்
ஒப்படைத்துவிட்டு அரசியல் துறவறம் மேற்கொண்டார். அன்று அவர் செய்த தியாகத்தினாலே கட்சி
ஒன்றானது. இரட்டை இலை கிடைத்தது. ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவும் முடிந்தது.
இப்போது ஜானகியம்மையார் போன்று எடப்பாடி பழனிசாமியும் இணைப்புக்குத்
தயாரானால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது.
ஜானகி வழியில் நடப்பாரா எடப்பாடி பழனிசாமி?