Share via:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (நவம்பர் 21) சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு சீமான் பதில் அளித்தார்.
அவர் பேசும்போது, அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது இருவரும் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த்தின் மனநிலைக்கு அரசியல் சரி வராது. ஏனென்றால் இந்த களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். நல்ல ஆட்சி கொடுத்தால், வாக்காளர்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லை. ஆனாலும் பலர் தொடர்ச்சியாக அதைத்தான் செய்கிறார்கள். இதைத்தான் சிஸ்டம் ராங் என்று ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதைத்தான் நான் தமிழில் அமைப்பு தவறாக இருக்கிறது என்று சொன்னேன். இது குறித்துதான் இருவரும் விவாதித்தோம் என்று பதில் அளித்தார் சீமான்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்பு வரை தம்பி, தம்பி என்று அழைத்த சீமான், விஜய்யை இப்போது தன்னுடைய அரசியல் எதிரியாக பார்க்கிறார். என்னதான் காக்கா, கழுகு பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், இன்னும் பலர் ரஜினிகாந்த், விஜய்க்கு இடையே சிண்டு முடியத்தான் செய்கிறார்கள். அந்த வேலையைத்தான் இப்போது சீமானும் பார்த்து வருகிறார் என்று நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.