Share via:
தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை சிறையில் இருந்து பத்திரமாக மீட்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 12) ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 11 மீனவர்களுக்கு நீதிபதி தலா 2 ஆண்டுகள சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இவர்கள் 11 பேரும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். புதிதாக கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.