Share via:
தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கட்சித் தலைமை மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தன்னுடைய கட்சியின் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வரப்போகும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்த கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு கட்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து வருவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தேனிமாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி கடந்த 10ம் தேதி (நவம்பர்) தனது பிறந்தநாளை அவருக்கு சொந்த ஊரான கருவேல்நாயக்கன் பட்டியில் வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அவருக்கு கிரேன் மூலம் ஆளுயர ராட்சத மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்ததாக தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா, தேனிநகர் காவல் நிலையத்தில் லெஃப்ட் பாண்டி மீது புகார் அளித்தார். புகாரின்படி த.வெ.க. தேனி மாவட்டத் தலைவர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.