Share via:
திராவிடமும், தமிழ்த்தேசியமும் ஒன்று என அரைவேக்காட்டுத்தனமாகப்
பிதற்றிய தவெக தலைவர் விஜய்க்கு எங்கள் அண்ணன் வகுப்பெடுத்திருக்கிறார் என்று நாம்
தமிழர் தம்பிகள் சீமானின் பேச்சைக் கொண்டாடி வருகிறார்கள்.
‘இந்தப் பக்கம் நில்லு இல்லைன்னா அந்தப் பக்கம் நில்லு நடுவுல
நின்னா லாரில அடிபட்டு செத்துப் போவே, கூமுட்டை அரசியல், இது பஞ்ச் டயலாக் இல்லை, நெஞ்சு
டயலாக்’ என்று விஜய்க்கு நேரடியாக எச்சரிக்கை செய்திருக்கிறார் நாம் தமிழர் சீமான்.
இதையடுத்து விஜய்க்கு எதிராக நாம் தமிழர்கள் பொங்கி எழுந்து சரமாரி தாக்குதல் தொடுக்கிரார்கள்.
நாம் தமிழர்களின் தம்பிகள், ‘’நாங்க யாருன்னு தெரியுமா ப்ரோ… தமிழின
எதிரி காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதே கடும் சண்டை செய்து வீழ்த்தியவர்கள்!
பதவிக்காகத் தமிழினத்திற்கு துரோகம் செய்த திமுகவை பத்து ஆண்டுகள் படுக்கையில் கிடத்தியவர்கள்!.
திரையில் புகழ்பெற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களையே பின்னுக்குத்
தள்ளி முன்னேறியவர்கள்! ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஐயா ரஜினிகாந்தைப் பகடையாக்கி
புறவாசல் வழியாகப் புக முயன்ற பாஜகவை விரட்டியவர்கள்.
பாசிச பாஜகவின் என்.ஐ.ஏ. அச்சுறுத்தலுக்கு அஞ்சாது கொள்கைப்பிடிப்போடு
சமரசமின்றி சண்டையிடுபவர்கள்!. திராவிட மாடல் ஆட்சியிலேயே திராவிடம் என்றால் என்ன என்று
கேட்டு பெரியவரையும், சின்னவரையும் ஓடவைத்துக் கொண்டிருப்பவர்கள்! வாயை விற்று பிழைக்கும்
திராவிட தினக்கூலிகளுக்கு தினமும் வாய்க்கரிசி போடுபவர்கள். நாங்க ஏதோ ஒரு டான்-ஐ அடிச்சு
மேல வந்தவங்க இல்லை ப்ரோ! நாங்க அடிச்ச ஒவ்வொருத்தனும் டானு தான்! எங்களை நீ தொட்டிருக்கக்
கூடாது ப்ரோ! ப்ச்ச் தொட்டுட்டியே!?’’ என்று சரமாரி தாக்குதல் தொடுக்கிறார்கள்.
சீமான் மீது நேரடியாக தாக்குதல் தொடுக்காத நிலையில் சீமான் ஏன்
இத்தனை கடுமை காட்டுகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டத்தில் விசாரித்தோம். ‘’விஜய்க்கு
இத்தனை பெரிய கூட்டம் கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் பெரியாரை தலைவராக
அறிவிப்பார் என்பதையும் எதிர்பாக்கவில்லை. மாநாட்டுக்கு வந்தவர்களில் 90 சதவீதம் பேர்
30 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களே எங்களுடைய ஓட்டு வங்கி. இவர்களின் ஓட்டு இது வரை
எங்களுக்குக் கிடைத்துவந்தது.
பெரியாரைப் பேசுவதால் அவருடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
மேலும், வரும் தேர்தலில் எங்கள் ஓட்டு வங்கிக்கு நேரடிப் போட்டியாக விஜய் மட்டுமே இருக்கிறார்.
விஜய்யினால் எங்கள் வாக்கு வங்கி சரிந்துவிட்டால் அது மிகப்பெரும் அரசியல் கறையாக மாறிவிடும்.
அதனால் நேரடியாக அடித்து விளையாடத் தொடங்கிவிட்டார்…’’ என்கிறார்கள்.