Share via:
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று விஜய் மாநாட்டில் பேசியது
திருமாவளவனை இழுப்பதற்கான அஸ்திரம் என்று கூறப்பட்டது. இப்படி பொதுவெளியில் இதை விஜய்
பேசியிருக்கக்கூடாது என்று திருமாவளவன் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால்,
இந்த மோதல் சும்மா செட்டப் என்பதும் நிஜமாகவே இருவரும் இணைய இருக்கிறார்கள் என்றும்
சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக, வரும் டிசம்பர் 6ம் தேதி நடக்கயிருக்கும் புத்தக
வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் விஜய்யும் சந்திக்கிறார்கள் என்பது தான் செம ஹாட்
செய்தி.
இது குறித்துப் பேசும் விசி.க.வினர், ‘’ஆட்சி அதிகாரத்தில் பங்கு
என்று விஜய் கூறியதுமே வி.சி.க.வின் ஆதவ் அர்ஜுனா அதற்கு வரவேற்பு கொடுத்தார். இனி,
அனைத்துக் கட்சிகளும் இது குறித்துப் பேச வேண்டும் என்று தி.மு.க.வை குறி வைத்துப்
பேசினார். இதற்கு உடன்பிறப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலே விஜய்யை விமர்சனம்
செய்து திருமாவளவன் கண்டிக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்த நிலையில், டிசம்பர் 6ம் தேதி திருமாவளவனும் நடிகர் விஜய்யும்
சந்திப்பதற்காகவே ஆதவ் அர்ஜுனா ஒரு விழா ஏற்பாடு செய்திருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
அம்பேத்கர் பற்றி ஆதவ் அர்ஜுனா எழுதியிருக்கும் ஒரு புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட
இருக்கிறார். இதற்கு அவர் விஜய்யையும் திருமாவளவனையும் ஒருசேர அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆதவ் அர்ஜூனாவின் தனிப்பட்ட புத்தக வெளியீட்டு விழா என்பதால் இது பொது நிகழ்ச்சியாக
நடக்கிறது. இதில் பங்கெடுக்க முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.
விஜய் கட்சியினரோ, ‘’திருமாவளவன் எங்கள் மீது கடுமையான விமர்சனம்
வைத்தாலும் நாங்கள் யாரும் அவரை தாக்கவே இல்லை. கட்சி ஆரம்பிக்கும் நேரத்திலேயே இந்தக்
கட்சியுடன் கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோன்று அ.தி.மு.க.வும்
எங்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றே நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், விஜய்
ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்தாலே தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
அதற்காகவே டிசம்பர் மாதம் முழுக்க தமிழகத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது பல்வேறு கட்சியினரும் அவருடன் இணையும் நிகழ்ச்சி நடக்கும்’’ என்கிறார்கள்.
தி.மு.க.வினரால் இப்போதும் இதனை நம்ப முடியவில்லை. தனியார் நடத்தும்
புத்தக நிகழ்ச்சி என்றாலும் இவை எல்லாம் திட்டமிட்டே நடத்தப்படுகிறது. விஜய்யை சந்தித்தால்
தி.மு.க. கூட்டணியில் அவரால் கண்டிப்பாக தொடர முடியாது என்கிறார்கள்.