Share via:
நடிகர் விஜய் முதல்
மேடையில் திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று சொன்னதையடுத்தே சீமானுக்கும் விஜய்க்கும்
மோதல் ஆரம்பம் என்று பலரும் கூறும் நிலையில், அதற்கு முன்னரே இரண்டு பேருக்கும் மோதல்
ஆரம்பித்துவிட்டது என்று ஆதாரங்களை அள்ளிப் போடுகிறார்கள்.
சீமான் தரப்பினர்,
‘’விஜய் கட்சி ஆரம்பிக்கு முன்னரே அன்போடு கூட்டணிக்கு அழைத்தவர் சீமான். இக்கட்டான
சூழ்நிலைகளில் விஜய்க்காக குரல் கொடுத்து நின்றவர் சீமான். அது அவரது பேரன்பு. ஆனால்
தனது முதல் கொள்கைப் பிரகடன மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்
என விஜய் கொள்கைக் குழப்பம் செய்ய ஆரம்பித்தபோது அண்ணன் சீமானின் நிலைப்பாடு மாறத்
தொடங்குகிறது.
மேடையில் சீமானை
சீண்டி வார்த்தைகள் விட்டது விஜய் தான். தன் மீது அன்பு கொண்டு நிற்பவரை பொது மேடையில்
தேவையில்லாமல் பேசி எதிரியாக்கிக் கொண்டவர் விஜய்தான். பறக்கும் விமானத்தை பார்க்க
கூட பத்து லட்சம் மக்கள் கூடிய ஊர் இது. கூட்டத்திற்காக கொள்கையை மாற்றி குழப்பம் செய்யும்போது
அது எதிர்க்கப்படத்தான் செய்யும். ஒருவரின் கொள்கை நிலைப்பாடுகள் தான் எதிரியா இல்லையா
என்பதை தீர்மானிக்கும். எதிரிக் கட்சியாக இருந்த போதும் சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின்
பேசியபோது எதிர்த்து கிளம்பிய வட இந்தியா அரசியல் தலைவர்களுக்கு எதிராக சீமான் ஆதரவுக்
குரல் கொடுத்தார்.
சீமான் ஒன்றில் தெளிவாக
இருக்கிறார். கொள்கை நிலைப்பாடுகள் சார்ந்தே ஆதரவும் / எதிர்ப்பும். நபர்கள் சார்ந்து
அல்ல. அதனால்தான் அண்ணன் சீமானால் விஜய் அன்று ஆதரிக்கப்பட்டார். இன்று எதிர்க்கப்படுகிறார்.
எங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கள் கண் முன்பாக திராவிடத்தாலும், இந்தியத்தாலும் வீழ்த்தப்பட்ட
வரலாறு எங்களுக்குள் வலித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது கனிம வளங்கள், எங்களது உரிமைகள்,
என அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விற்கிற மோசடித்தனத்தை திராவிடமும் இந்தியமும் கூட்டு
சேர்ந்து செய்யும் போது இந்த மண்ணில் பிறந்தவர்களாகிய நாங்கள் அதை எதிர்த்து நிற்க
வேண்டியதை எங்களது பிறப்பின் கடமையாக நாங்கள் கருதுகிறோம். அதை திசை மாற்ற விஜய் வருவதால்
எதிர்க்கிறோம்’’ என்கிறார்கள்.
விஜய் ஆதரவாளர்களோ,
‘’மேடையில் சீமானை நேரடியாகத் தாக்கிப் பேசவே இல்லை. வெறுப்பு அரசியல் பேச வரவில்லை,
கத்திக் கூப்பாடு போடுவது எனது சுபாவத்துக்கு சரிப்படாது’’ என்பதையே விஜய் பேசினார்.
பெரியார், அம்பேத்கரை தலைவராக ஏற்பதும் தேசியத்தையும் திராவிடத்தையும் மதிப்பது எங்கள்
கொள்கை என்று அறிவித்திருக்கிறார்.
உண்மையான அன்பு கொண்டவர்
என்றால் எங்களையும் எங்கள் கொள்கைகளையும் மதிக்க வேண்டும். அவர் கொள்கையைப் பின்பற்ற
வேண்டும் என்றால், எங்களுக்கு தனிக் கட்சிக்கே அவசியம் இல்லை. அவர் சொன்னபடி எல்லாம்
விஜய் ஆடுவார் என்று சீமான் நினைத்தார், அது நடக்கவில்லை என்றதும் கோபம் ஆகிறார். இதையெல்லாம்
நாங்கள் கண்டுகொள்ளவே இல்லை’’ என்கிறார்கள்.
சீமானும் விஜய்யும்
மோதிக்கொள்வதால் தி.மு.க.வுக்குத் தான் லாபம் கிடைக்கும். இதை மனதில் வைத்தாவது இருவரும்
ஒன்று சேரவேண்டும் என்று தம்பிகளும் உண்மையான விஜய் ரசிகர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
வேடிக்கை பார்க்கலாம்.