Share via:
கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பலர் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதோடு தீபாவளி முடிந்தும் நவம்பர்3ம் தேதி வரை ஆர்வமாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதை மீறி பலர் பட்டாசு வெடித்தபோது விபத்துகளில் சிக்கின அசம்பாவிதங்களும் அரங்கேறின.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதிவரை பட்டாசு வெடித்தவர்களில் 300க்கும் மேற்பட்டோர் கண்பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இவர்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி அவர்களில் 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டதாகவும் பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாட ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இருப்பினும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து கொண்டாட பெற்றோர் மற்றும் பெரியோர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.