Share via:
குடும்ப ஊழல் ஆட்சிக்கு நாங்கள் எதிரி என்று விஜய் நேரடியாக ஆளும்
தி.மு.க.வை விமர்சனம் செய்தார் என்றாலும் இப்போது தி.மு.க.வினரை விட சிறுத்தைகளே அதிகம்
தாக்குதல் நடத்துகிறார்கள். அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடிவரும் திருமாவளவனுக்கு விஜய்
நேரடியாக அழைப்பு விடுத்து அவமானப்படுத்தியிருப்பதாக சிறுத்தைகள் பல்லைக் கடிக்கிறார்கள்.
அரசியல் அணுகுண்டு என்று விஜய், ‘ஆட்சியில் பங்கு’ தர்றோம் என்று
மற்ற கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். அம்பேத்கர் படத்தை வைத்து அரசியல் செய்து
அரசியல் செய்துவரும் திருமாவளவனின் வாக்கு வங்கியை விஜய் தகர்த்துவிடலாம் என்பதால்
தி.மு.க. கூட்டணியை முறித்துக்கொண்டு விஜய்யுடன் சேர்ந்துவிடுவார் என்று பலரும் நினைத்தார்கள்.
அப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜூனாவின் விஜய்க்குப் பாராட்டும்
இருந்தது.
ஆனால், என்ன நடந்ததோ திடீரென விஜய்க்கு கடுமையான எதிர்ப்பு நிலை
எடுத்துவிட்டார் திருமாவளவன். அவரது அறிக்கையில், ’’பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை
போல” ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ‘அதிமுகவுக்கு
முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்’ என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ
எனத் தோன்றுகிறது. ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க
வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட்
(DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில்,
பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு
நடந்தேறியுள்ளது..’’ என்று கண்டித்திருந்தார்.
இதையடுத்து விசிகவின் ரவிக்குமாரும், ‘’அதிகாரத்தில் பங்கு என
விஜய் பேசிய உடனேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கு சென்றுவிடும் எனப் பேசுவது ஒரு
சாதீயப் பார்வை என நினைக்கிறேன். இது எங்களுக்குப் பெரும் ஆத்திரமூட்டுகிறது. யார்
ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் அங்கு போகிறோம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோமா?
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னவுடன் திருமா அவரைச் சந்தித்து,
அவருக்கு ஆதரவு தருவார் என நினைப்பது மிக மோசமான பார்வை. இது விடுதலைச் சிறுத்தைகளை
அசிங்கப்படுத்தும் பார்வை,” என்கிறார்
இதையடுத்து சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் விஜய்
மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கிறார்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத
தாக்குதல் வருவதை அறிந்து விஜய் கட்சியினர் அதிர்ந்துபோய் நிற்கிறார்கள். இதற்கு எப்படி
எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகள் மீது அவதூறு பரப்பும் பணியை
விஜய் டீம் செய்துவருகிறது.
விஜய் இனியும் வாய் மூடி இருக்க முடியாது.