Share via:
தமிழக வெற்றிக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சில மாதங்களிலேயே மின்னல் வேகத்தில் கட்சிப்பணியாற்றி வருகிறது. இது திராவிட கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தம்பி, தம்பி என்றும், கூட்டணி குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் பகிரங்கமாக விஜய் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மிகப்பெரிய அளவில் அந்தர்பல்டியடித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் கொள்கை குறித்தும், கோட்பாடு குறித்தும் தீர்க்கமாக பேசினார். இது திராவிட கட்சிகள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சியையும் கொந்தளிக்க செய்துள்ளது.
இந்நிலையில் காங்கிரசைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் மற்றும் சீமான் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் தனக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்து கொண்ட சீமான், விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது ஆதரவாளர்கள் தன்னைவிட்டு எங்கே விஜய்யிடம் சென்றுவிடுவார்களோ என்ற கவலை அவருக்கு அதிகரித்துள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசம் தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு அதிகரித்து விட்டது என்று மாணிக்கம் தாகூர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.