Share via:
விஜய் மாநாடு நடத்தும் வரையிலும் வாய்க்கு வாய் என் தம்பி, என்
தம்பி என்று விஜய் மீது பாச மழை பொழிந்துவந்தார் நாம் தமிழர் சீமான். அரசியல் கட்சி
தொடங்கியதும் சீமானும் விஜய்யும் கூட்டணி சேர்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால்,
இப்போது அவர் பெரியாரை தலைவர் என்றும் திராவிடம் என்னுடைய ஒரு கண் என்றதுமே கூட்டணிக்கு
வாய்ப்பு இல்லை என்றாகிப் போனது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில்
இருக்கும் காளியம்மாளும், சீமானிடம் அவ்வப்போது திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் சாட்டை
துரைமுருகனும் விஜய் கட்சியில் சேரப்போவதாக வரும் தகவலை அடுத்து நாம் தமிழர் கூடாரம்
சலசலத்து நிற்கிறது.
நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பெண் பிரமுகரான காளியம்மாளை பிசிறு
என்று கூறியது சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வை உண்டாக்கியது. இந்த விவகாரத்துக்கு
சீமான் மன்னிப்பு கேட்பார் என்று காளியம்மாள் எதிர்பார்க்கிறார். ஆனால், சீமான் இந்த
விவகாரம் குறித்து காளியம்மாளை நேரில் சந்திக்கும் நேரத்திலும் பேசுவதற்குத் தவிர்க்கிறார்.
இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், ‘நமக்கு பிசிறு என்பதே
இல்லை’ என்று எல்லோருக்கும் முக்கியத்துவம் தருவதாகத் தெரிவித்தார். ஆகவே, தொடர்ந்து
கட்சியில் நீடிப்பது கடினம் என்பதாலே விஜய் கட்சிக்குத் தாவப்போவதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து சீமானிடம் கேட்டபோதும், ‘’நான் கூட விஜய் கட்சியில்
சேரப்போகிறேன்னும் சொல்வாங்க’ என்று திசை மாற்றினாரே தவிர, காளியம்மாள் குறித்து ஒரு
வார்த்தையும் பேசவில்லை. இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் விஜய் மேடைப் பேச்சு குறித்து
ஒரு வீடியோ வெளியிட்டார். இதில் விஜய் அரசியல் வருகைக்கு பலமான ஆதரவு கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் நாம் தமிழர்களே, ‘சாட்டை கட்சி மாறுவது உறுதி’ என்று பேசத்
தொடங்கியுள்ளனர்.
இந்த விஷயம் அறிந்து துரைமுருகன் இன்று, ‘’விஜய் மாநாடு குறித்து
காணொளி வெளியிட்டால் விஜய் கட்சியில் சேரப் போகிறீர்களா ? அண்ணாமலையைப் பற்றி பேசினால்
பாஜகவில் இணையப் போகிறீர்களா? எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறித்து பேசினால் அதிமுகவில்
இணையப் போகிறீர்களா? சவுக்கிற்கு எதிராக காணொளி வெளியிட்டால் திமுகவில் இணைந்து விட்டீர்களா?
இப்படி கேட்கும் உங்கள் அற்பத்தனத்தை நினைத்து பெரிதும் வியக்கிறேன் ! நான் யார் என்பது
நான் ஏற்றுக் கொண்ட தலைமைக்குத் தெரியும் !’’ என்று ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
சேரமாட்டேன்னு வெளிப்படையா சொல்ல மாட்டேங்கிறாரே…