Share via:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் ஒரே பிரபலமான
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை
நடத்தியதாக செய்தி வெளியானது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் பா.ஜ.க. மூலம் வைத்திலிங்கத்துக்கு
எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ரெய்டு நடப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இப்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக
இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில்
இடம்பிடித்துள்ளார். இவர் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி
வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,
பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டடத்தின்
உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்பு 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிலுவையில்
இருந்தது தெரியவந்தது. 2016ம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம்
ரூபாயை லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இதில் வைத்திலிங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திவரும்
அவரது 2 மகன்களான பிரபு மற்றும் சண்முக பிரபு உட்பட 11 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று
வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தையான்குடிகாடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை
முதல் சோதனை நடந்து வருகிறது. அங்கு 11 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட அமலாக்கத்
துறை அதிகாரிகள் குழு சோதனை நடக்கிறது.
இதற்கு காரணம் ஓபிஎஸ் என்று அவரது ஆட்களே குற்றம் சாட்டுகிறார்கள்.
சமீபகாலமாக ஓ.பி.எஸ் மீது
அதிருப்தியில் வைத்திலிங்கம் இருந்தார். இதையடுத்து எடப்பாடி டீமில் சேர்வதற்கு முயற்சி
செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை எதிர்க்கும் வகையில் அமலாக்கத்துறையை பா.ஜ.க. மூலம்
பன்னீர் இயக்குவதாகச் சொல்கிறார்கள்.
உண்மையா என்பதை பன்னீரும் வைத்தியும்தான்
சொல்ல வேண்டும்.