Share via:
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை பிரியங்கா தாக்கல் செய்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார்.
ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே அவர் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் தனது வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்.பி.யானார். இதைத்தொடர்ந்து காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு 6 மாதங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி டிசம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் சார்பில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று (அக்டோபர் 23) தாக்கல் செய்ய மைசூரில் இருந்து கார் மூலம் வயநாடு வந்து சேர்ந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரான சோனியா காந்தி, பிரியங்கா காந்தியின் கணவர், குழந்தைகள் என அனைவரும் வந்திருந்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த அவர் அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதற்கு முன்னதாக கல்பெட்டா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் மக்கள் முன்னிலையில் ரோடுஷோ நடத்தினார்கள். அங்கு திரண்டிருந்த மக்கள் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை கைகளை அசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
ரோடுஷோ முடிவடையும் இடத்தில் நடந்த பிரசார கூட்டத்திலும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சிப்பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.