Share via:
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 2 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிராமணர் சமூகத்தினர் சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இதைத்தொடர்ந்து தெலுங்கு அமைப்பினர் மற்றும் தெலுங்கு மக்கள் உள்ளிட்டோர் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.
இதற்கிடையில் சென்னை, மதுரை உள்ளிட்ட சில இடங்களில் கஸ்தூரி மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி நாயுடு மகாஜன சங்கத்தினர், கஸ்தூரி மீது புகார் அளித்த நிலையில், அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இருப்பினும் கஸ்தூரி வீட்டுக்கு போலீசார் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று மனுவும் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், கஸ்தூரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். கூடிய விரைவில் கஸ்தூரி கைது செய்யப்பட்டுவார் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.