Share via:
தி.மு.க. அரசுக்கு எதிராக முன்பை விட வீரியமாக செயல்படுவேன் என்று
சவுக்கு சங்கர் கூறியிருக்கும் நிலையில் அவரை தங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றுமாறு
இரண்டு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் அல்லது
உதயநிதிக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்துவதற்கும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கரை அ.தி.மு.க. ஆதரவாளர்களும்
பா.ஜ.க. ஆதரவாளர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள்
மூலமாக அ.தி.மு.க. மேலிடத்தில் இருந்து நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘’தொடர்ந்து
தி.மு.க.வை எதிர்த்து கடுமையாகப் போராட நினைக்கும் சவுக்கு சங்கருக்கு கட்சியில் சேர்ந்து
பணியாற்றுவது மட்டுமே கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வரும் தேர்தலில் அவர் விரும்பும் வகையில் ஸ்டாலின் அல்லது உதயநிதியை எதிர்த்துப்
போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்’ என்றும் உறுதி தரப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் இந்த ஆஃபரை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை.
‘நான் யோசித்துச் சொல்கிறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதேநேரம், பா.ஜ.க.வில்
இருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து பணியாற்றுவது
அவருக்கு வலிமை சேர்க்கும், தேவையின்றி அச்சப்பட அவசியம் இல்லை என்று அவருக்கு வேண்டியவர்களும்
ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள்.
இப்போதைக்கு சவுக்கு சங்கர் அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்துக்
கொண்டுவரவும், கஞ்சா வழக்கில் இருந்து வெளியே வரவும் முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
அதேநேரம் மீண்டும் சிக்கலான விஷயங்கள் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரின் வரவு தி.மு.க.வினருக்கு பெரும்
சவாலாக மாறியிருக்கிறது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்தை அவசரம் அவசரமாக
வாபஸ் பெற்றதன் மூலம் தி.மு.க.வின் மானம் பறிபோயிருக்கிறது. சவுக்கு சங்கர் போன்ற ஒருவரை
பழி வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் டஜனுக்கும்
மேற்பட்ட வழக்குகள் பதிந்து ஊர் ஊராக அலைய விட்டதையும், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார்
என்று அவர் இமேஜை குலைக்க முயற்சி செய்ததையும் பார்க்கும் சாதாரண பொதுஜனம் இது தான்
திராவிட மாடலா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை யார் செய்தாலும் சிறையில் தூக்கிப்
போட்டு ஜாமீன் கொடுக்காமல் அலையவிடுவோம் என்று தொடர்ந்து அடாவடி செய்யும் பா.ஜ.க. அரசுக்கும்
தி.மு.க.வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.
அதோடு சிறையில் கை உடைக்கப்பட்ட கதையை சங்கர் அவரது முதல் வீடியோவில் வெளியிடுவார்
என்று ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.