Share via:
உலகபிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள் இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதி லட்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் லட்டு விவகாரம் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கு வழங்கப்பட்டு வரும் லட்டு உள்ளிட்ட பிரசாத பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் லட்டு பிரசாத பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த டிரே மற்றும் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்துவது போலவும், அந்த பாக்கெட்டுகளுக்குள் எலிக்குட்டிகள் இருப்பது போலவும் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லட்டு பாக்கெட்டுகளை எலிகள் சேதப்படுத்தி, அதில் தாய் எலி, தன்னுடைய எலிக்குட்டிகளை போட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து கோவில் அறக்கட்டளை தலைவரும், சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சதாசர்வன்கர் கூறும்போது, ‘‘வீடியோவில் காட்டப்படும் இடம் மிகவும் அசுத்தமாக உள்ளது. எனவே இது கோவிலில் எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது. வெளியில் எங்கேயோ எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் குறித்து துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யார் என்று கண்டறியப்படும். அப்படி தவறு நடத்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.