Share via:
கேரள மாநிலத்தில் பலே கொள்ளையர்கள் 3 ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்து வந்த பணத்துடன் நாமக்கல் போலீசில் சிக்கிய சம்பவம் குறித்த அதிர்ச்சி பின்னணி உங்களுக்காக.
கேரள மாநிலம் திரிச்சூரில் நேற்று (செப்.28) நள்ளிரவில் 3 ஏ.டி.எம்.களில் லட்சக்கணக்கான பணத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பலே கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அந்த பணத்துடன் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பித்து செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ரோந்துப்பணிகளை போலீசார் அதிகரித்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் நிற்காமல் தாண்டிச் சென்றது குறிப்பிட்ட அந்த கண்டெய்னர். அப்பொழுது அந்த லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சினிமா பாணியில் போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை துரத்திச் சென்றனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஈரோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியும் லாரியில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்ததால், மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது மேற்கொண்ட சோதனையில் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஒரு சொகுசு காரும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், லாரிக்குள் மறைந்திருந்த சிலர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்ட நிலையில், சிலர் தப்பியோடினர். போலீசார் சுடப்பட்ட நபர் உயிரிழந்தநிலையில் தப்பிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களின் பின்புலம் என்ன? ஏ.டி.எம். கொள்ளைக்கு உள்ளூரிலேயே யாரேனும் அவர்களுக்கு உதவி செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.