Share via:
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது உறுதியானதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையிலே தி.மு.க.வின் பவளவிழா கொண்டாட்டத்தில் கனிமொழி கலந்துகொள்ளவில்லை
என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்வது போன்று உதயநிதி பதவியேற்பு விழாவுக்கு தாமதமாக
வந்து எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதுமட்டுமின்றி உதயநிதி பதவியேற்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
‘’உதயநிதிக்கு நான் அட்வைஸ் செய்ய அவசியம் இல்லை’’ என்றும் கூறியிருக்கிறார். முன்னதாக
சி.ஐ.டி. காலனிக்கு வந்து உதயநதி நேரடியாக கருணாநிதி படத்துக்கு மாலை போட்டுவிட்டு
புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசும் கனிமொழி ஆதரவாளர்கள், ‘’கட்சியில் சீனியர்,
2ஜி வழக்கில் சிறை சென்றவர் என்ற அளவில் கட்சியில் உதயநிதியை விட கனிமொழிக்கே அதிக
தகுதிகள் இருக்கிறது. டெல்லியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைமையின் ஆதரவும் இருக்கிறது.
ஆனாலும் கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்குப் போதிய மதிப்பும் மரியாதையும் இல்லை. இப்போது
அவரது ஆதரவாளரான மனோ தங்கராஜ் நீக்கப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் வீட்டுக்கு வந்த உதயநிதி
விளக்கம் கொடுப்பார், வரும் தேர்தலில் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது பற்றி வாக்குறுதி
வழங்கி சமாதானப்படலம் நடக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவை எதுவும் நடைபெறவில்லை.
முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜியை
தியாகி என்று பாராட்டினார். உண்மையில் கட்சிக்காக துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கும்
கனிமொழியே உண்மையான தியாகி. அவர் கோபத்தில் இருக்கிறார் என்றாலும் அடுத்தகட்ட நடவடிக்கையில்
இறங்குவதாகத் தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்து இன்பநிதிக்கும் வாழ்த்து சொல்ல
வேண்டிய நிலைமை உருவாகிவிடும்’’ என்று வருந்துகிறார்கள்.
கனிமொழி என்ன செய்யப்போகிறார் என்பது தான் கேள்வி.