Share via:
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் யாருக்குப் பாதிப்பு இருக்கிறதோ
இல்லையோ, சீமான் கட்சிக்கு பெருவாரியான இழப்பு வரும் என்பதே யதார்த்தமான உண்மை. ஏனென்றால்,
சீமானுடைய கட்சியில் 18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
விஜய் பந்தக்கால் நடுவதற்கே 5 ஆயிரம் பேர் ஒன்று கூடியிருக்கிறார்கள். இதை கவனித்து,
விஜய் முந்திக்கொள்ளக் கூடாது என்று சீமான் இன்று அறிக்கை விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தமிழ்நாடு தேர்தல்
ஆணையம் நவம்பர் 09, 10, 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து
வாக்ககங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்தவிருக்கிறது. இச்சிறப்பு முகாம்களில் 18-வயது
நிறைவடைவோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில்
பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறவிருக்கின்றன. அதனைத்தொடர்ந்து,
2025 சனவரி 1-ஆம் தேதி அன்று நிழற்படங்களுடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலும் தேர்தல்
ஆணையத்தால் வெளியிடப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு நாளும் இளைய தலைமுறை பிள்ளைகள் அதிகளவில்
இணையும் கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்குகிறது. 18 வயது நிறைவடையும் தருவாயில் உள்ள
இளம் பிள்ளைகள் பலர் உணர்வெழுச்சியுடன் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராய் இணைந்து
சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். ஆகவே, அன்பிற்குரிய நாம் தமிழர் உறவுகள் தங்கள்
பகுதியில் இளம் தம்பி-தங்கைகளுக்கு இந்தச் சிறப்பு முகாம்கள் குறித்து எடுத்துக்கூறி,
அவர்கள் அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து
உறுதிசெய்து கொள்ளவும்.
இன்றளவும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத, பதிவு செய்தும்
பட்டியலில் இடம்பெறாத இளம் பிள்ளைகளிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, அவர்களது பெயர்களை
வாக்காளர் பட்டியலில் முறையாக இணைப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு, அவர்கள் அனைவரும்
வாக்காளர் அடையாள அட்டைபெற உதவிட வேண்டும். மேலும், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும்
தங்களது பெயர்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதையும் தவறாமல் சரிபார்த்துக் கொள்வதோடு,
வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, திருத்தம் தேவைப்படும் உறவுகளுக்கு அதற்கான வழிகாட்டு
உதவிகளையும் செய்துதர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த விஷயத்தில் விஜய் முந்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே சீமான்
இப்படி அவசரம் காட்டுவதாக நாம் தமிழர் கட்சியினர் சொல்கிறார்கள். சீமானா, விஜய்யா என்று
இளசுகளுக்குத் தான் தர்ம சங்கடம்.