Share via:
விஷ்வகர்மா திட்டம் என்பது புதிதாக கைவினைத் தொழில்களைத் தொடங்க
ஊக்குவிக்கும் திட்டம் என்று குலத்தொழிலுக்கு ஆதரவாக கூட்டம் போட்டு பேசிய வானதி சீனிவாசனுக்கு
கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ஈஷா மையத்துக்கு
ஆதரவாக நேரடியாக களம் இறங்கியிருக்கிறார். ஹெச்.ராஜா அமைதியாக இருக்கும் நிலையில் வானதி
சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவதை அடுத்து, அண்ணாமலை இடத்துக்குப் போட்டியிடுவதாக
சொல்லப்படுகிறது.
விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் ஐந்தொழில் செய்பவர்கள் சலவை ,சவரம்,செருப்பு
தைக்கும் தொழில் கூடை முனைதல் உட்பட அனைவருமே கைவினைஞர்கள்! பயிற்சி மானியம் கொடுத்து
செயல்படுத்தப்படும் திட்டம். எல்லோரும் கைத்தொழில் கற்றுக்கொள்வது தவறு இல்லை என்று
நேரடியாக குலத் தொழிலுக்கு ஆதரவு கொடுத்தார் வானதி சீனிவாசன். இந்த விவகாரத்தை ஆளும்
தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன.
இந்த நிலையில் இன்று, ’கோடிக்கணக்கான மக்களை ஈர்ப்பதால் ஈஷா யோக
மையத்திற்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்’ என்று தி.மு.க. மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈஷாவில் நடக்கும் சிவராத்திரி விழாவில்
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பேரார்வத்துடன் வந்து குவிகிறார்கள். ஆதியோகி
சிலை, தியானலிங்கம், லிங்கபைரவி ஆலயத்தை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
வருகிறார்கள். ஈஷாவில் யோகப் பயிற்சி பெற்று உடல், மனதிற்கு புத்துணர்ச்சி பெற்று பயன்
பெற்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.
ஈஷா நடத்தும் உழவர் உற்பத்தி குழுக்கள் இயற்கை வேளாண்மையில் பெரும்
புரட்சியை செய்து கொண்டுகிறது. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து
அவர்களுக்கு பயிற்சியும், தேவையான உதவிகளையும் செய்து வருகிறது இப்படி ஈஷா யோக மையத்தையும்,.
அதன் நிறுவனர் சத்குரு அவர்களை நோக்கியும் பல லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுவது,
இந்து மத எதிர்ப்பாளர்கள், பிரிவினைவைாதிகளின் கண்களை உறுத்துகிறது. அதனால்தான் ஈஷா
யோக மையம் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எந்தவொரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும்
ஈஷாவின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் நூற்றுக்கணக்கான காவல்துறையினருடன்
சென்று ஈஷாவில் சோதனை நடத்தியுள்ளனர்.
சனாதன தர்மத்தில் அதாவது இந்து மதம் என்பது, பெண்கள், ஆண்கள்,
விவகாரத்து ஆனவர்கள், கணவரை இழந்தவர்கள் என அனைவரையும் ஏற்கும் சமத்துவம், சமூக நீதி
மதம். ஈஷா யோக மையம் போன்ற அமைப்புகள் அனைத்துத் தரப்பினரையும் சனாதனத்தை நோக்கி ஈர்க்கிறது
என்பதால் அதை ஒழித்துக் கொண்ட முயற்சிக்கிறார்கள். சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை
யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்” எனக்
குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன்
பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க.வுக்குள் விவாதங்கள் நடக்கின்றன.
தமிழிசைக்குப் போன்று வானதிக்கு எதிராகவும் அண்ணாமலை ஐ.டி. விங் களம் இறங்கும் என்கிறார்கள்.