Share via:
தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்ததில் இருந்தே பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதோடு கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்.
விஜய் முதல்முறையாக நீட் குறித்து அறிக்கைவிட்ட போது, அதையும் தமிழிசை விமர்சனம் செய்தார். ஒரு விஷயத்தை பற்றி சரியாக தெரியாமல் அறிக்கை விடாதீர்கள் என்றும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் விமர்சித்தார். இது த.வெ.க. தொண்டர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து பெரியார்திடலுக்கு சென்ற அவர், பெரியார் திருவுருவ சிலைக்கு முதன்முறையாக மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதையும் விமர்சித்து, திராவிட சாயலில் தமிழகத்திற்கு இன்னொரு கட்சி வேண்டாம் என்று கடும் வார்த்தைகளை தூவினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பூஜை நடத்தப்பட்ட நிலையில் அதையும் விமர்சனம் செய்துள்ளார். கமலாலயத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் நீடித்து வருகின்றன.
உங்கள் கட்சி புதிய கட்சியாக உள்ளது. உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறு கிடையாது. இருப்பினும் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். ஒரு குட்டி திராவிட கட்சியை போல இருக்கும் விஜய்யின் கட்சியினர் பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள். நல்ல நேரம் காலம் பார்த்து எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று பேசியுள்ளார். அதோடு தி.மு.க. செய்கிற எல்லாவற்றையும் தமிழக வெற்றிக்கழகமும் செய்கிறது என்ற ரீதியில் அவர் பேசியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.