Share via:
கூல் லிப், விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரபரப்பு கேள்வியை எழுப்பியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவருகிறது. இதற்கு முன்னதாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழிகளை எடுக்க வைக்கிறார்கள். மேலும் போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்தியும் அதை விற்பவர்கள் மீதும் அதிகபட்ச சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லிப் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூல்லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களை குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களில் இருந்து வெளியே கொண்டு வராவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இதனால் கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வியும் எழுப்பினார்கள்.
மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால், போதைப்பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கின் தீர்ப்பு குறித்த தேதியை குறிப்பிடாமல் நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.