Share via:
கல்லூரி மாணவர்கள் மோதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த சுந்தர் என்பவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் அடிக்கடி கோஷ்டி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5ம்தேதி) சுந்தர் சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுந்தரை கொலைவெறியுடன் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுந்தரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர், சிகிச்சை பலனின்றி 5 நாட்கள் கழித்து இன்று காலை (அக்டோபர் 9) பரிதாபமாக உயிரிழந்தார்.
சுந்தர் உயிரிழந்ததை தொடர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா வண்ணம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு கல்லூரிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மின்சார ரெயில் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவர் சுந்தரை தாக்கியதாக திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.