Share via:
லண்டனுக்குப் படிக்கப்
போயிருக்கும் அண்ணாமலை சில நாட்களாக எந்த சத்தமும் காட்டாமல் இருந்தார். ஆனால் இன்று
திடீரென கப்பலோட்டிய தமிழனுக்கு பாராட்டு, மோடிக்குப் பாராட்டு என மீண்டும் இயங்கத்
தொடங்கியிருக்கிறார். இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மீண்டும் காவி
திருவள்ளுவரை கையில் எடுத்திருக்கிறார் எல்.முருகன்.
உலகில் முதல் முறையாக
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
அறிவிப்பு செய்திருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசினால் தி.மு.க.வினர்
கொதிப்பார்கள் என்று தெரியும் என்பதாலே இன்று காவி வண்ணத்தில் திருவள்ளுவர் படத்தைப்
போட்டு பிரதமருக்கு நன்றி கூறியிருக்கிறார்.
இது குறித்து அமைச்சர்
எல்.முருகன், ‘சிங்கப்பூரில் அமையவிருக்கிற இந்த கலாச்சார மையமானது, உலகெங்கும் வாழ்கின்ற
தமிழர்களை, மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும்.
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசங்களுக்கு
புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், இந்த கலாச்சார மையம் செயல்படும்.
முன்பு, பிரான்ஸ்
நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும்,
ஐநா சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும்
குறிப்பிட்டு பெருமைப்படுத்தி வரும் நமது பாரத பிரதமர் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையாக
இந்த அறிவிப்பை பார்க்கிறோம்…’’ என்று வேண்டுமென்றே காவி திருவள்ளுவர் படத்தை பதிவு
செய்திருக்கிறார்.
அண்ணாமலை இல்லாத
நேரத்தில் தீவிரமான தி.மு.க. எதிர்ப்பும் அ.தி.மு.க. ஆதரவு நிலையும் எடுக்க வேண்டும்
என்பது தான் எல்.முருகன் எண்ணமாக இருக்கிறது. ஹெச்.ராஜாவுக்கு எல்.முருகன் ஆதரவு உண்டு
என்பதால் இவையெல்லாம் அண்ணாமலையை ஓரங்கட்டும் வேலையாகவே பார்க்கப்படுகிறது.