News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பள்ளிக் கூடத்தில் பாவம், புண்ணியம் பாடம் எடுத்ததுடன் நில்லாமல் மாற்றுத் திறனாளியை அவமானப்படுத்திய மஹாவிஷ்ணுக்கு ஆதரவாக பா.ஜ.க. களத்தில் நிற்கிறது. இதுவரை மஹாவிஷ்ணுவை கண்டிக்காத சீமான், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பது அவரது கட்சியினரிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

சீமான் இன்று, ‘’சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ – மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா? ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது?

அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப் பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று, ஆசிரியர் கால்களை மாணவ – மாணவியர் கழுவி, அதற்கு பூசைகள் செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதெல்லாம் யாருடைய பண்பாடு? இப்புதிய பழக்கங்களை வலிந்து திணிப்பது யார்?

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவ்வாறு நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது? அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்?

தமிழரசி அவர்களுக்கு வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது மிக கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.’’ என்று செந்தமிழன் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அறிக்கையில் மஹாவிஷ்ணுவின் பேச்சுக்கு எங்கேயும் கண்டனம் தெர்விக்காமல் தி.மு.க. மீது மட்டுமே குறை கூறியிருப்பதைக் கண்டு அவரது கட்சியினரே அதிர்ந்து நிற்கிறார்கள். பா.ஜ.க.வின் பி. டீம் என்பதை சீமான் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார் என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link