Share via:
தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சியிலும்
பதவி வாங்குவதற்கும் தங்கள் எல்லையை ஆட்சி புரியவும் பெரிய அக்கப்போரே நடக்கும். இந்த
விவகாரத்தில் அவ்வப்போது எல்லை மீறி கொலை நடக்கும். ஆளும் தி.மு.க. உட்கட்சி பூசலுக்கு
அதிகாலை வாக்கிங் படுகொலை படு ஃபேமஸ்.
இந்த நிலையில் இன்னமும் கட்சிக்கு கொடியைக் கூட அறிமுகம் செய்யாத
நிலையில் நடிகர் விஜய்யின் கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் நடந்திருப்பதும் கத்திக்குத்து
நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் படங்களில் வன்முறை கொடி
கட்டிப் பறக்கும், கட்டப்பஞ்சாயத்து நடக்கும். அதே பாணியில் அவரது ரசிகர்ளும் அடிதடி,
வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர்
கலைச்செல்வன் என்பவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக
உள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நடிகர் விஜய்யின் கோட் படத்தின்
ஸ்டிக்கர்களை சில வாலிபர்கள் ஆட்டோவில் ஒட்டியுள்ளனர்.
இதை அறிந்த கலைச்செல்வம் தரப்பினர் நேற்று முன்தினம் இரவு ஸ்டிக்கர்
ஒட்டிய இளைஞர்களிடம், “கட்சி நிர்வாகியான நான் இருக்கும் போது நீங்கள் எப்படி
படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம்” என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த
தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள சி.எம். செல்வம் என்பவர்
சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசி அனுப்பியிருக்கிறார்.
இதில் ஆத்திரம் தணியாத கலைச் செல்வம் தரப்பினர், நேற்று இரவு செல்வம்
வீட்டிற்கு சென்று “நீ யார் இந்த விஷயத்தில் தலையிட?” எனக்கு கேட்டு தகராறு
செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பை
சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் தரப்பை சேர்ந்த விஜய் என்பவர்
மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு
செய்து தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவர் கலைச்செல்வம் அவரது மகன்கள் சஞ்சய்,
லிங்கேஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
இந்நிலையில் கைதான குடியாத்தம் ஒன்றிய தமிழக வெற்றி கழக தலைவர்
கலைச்செல்வனின் மனைவி உஷாராணி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த
புகாரில், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், எதிர்த்தரப்பை சேர்ந்த செல்வம்
ஆட்களும் எங்களது கணவர் மற்றும் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் அவர்களுக்கு
தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் முறையிட்டு வருகிறார்.
விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே இப்படியிருக்கிறதே, இன்னும்
என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?