Share via:
இன்று தலைமைக்கழகத்தில்
நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கும், எதிர்ப்புக் குரல்
எழும் என்று பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. சசிகலாவின் தூண்டுதலில் சில முக்கிய நிர்வாகிகள்
கடுமையான எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள், சண்டை நடக்கும் என்றும் கருதப்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் முடிவுக்கு
வந்திருக்கிறது.
இன்றைய கூட்டத்தில்
9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க.வுக்கு கடுமையான எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்
தெரிவித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல்
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்காததும் மருத்துவக் காப்பீடுக்கு 18% ஜி.எஸ்.டி.
விதிக்கப்படுவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழநாட்டில்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமாக விடியா தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி குன்றியதற்குக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி
செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில்
பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் மக்களவைத் தேர்தலில் கடமைக்குப்
பணியாற்றினார்கள். அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும் என நிர்வாகிகள் பலர் பணியாற்றவில்லை.
நிர்வாகிகள் பெரும்பாலோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை. அ.தி.மு.க. நிர்வாகிகள்
பலரின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்திருக்கிறார்.
.
கட்சியில் தனி ஆவர்த்தனம்
செய்துவரும் சில நிர்வாகிகளை நீக்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும், அதை பழனிசாமி செய்ய
வேண்டும் என்று அத்தனை நிர்வாகிகளும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.