Share via:
ஆணவக் கொலை குறித்து நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த 9ம் தேதி வெளியான கவுண்டம்பாளையம் படத்தை நடித்து இயக்கியுள்ளார் ரஞ்சித். 90ஸ் கால நடிகரான இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவுண்டம்பாளையம் இசை வெளியீட்டு விழாவில் நான் சாதிவெறியன்தான் என்று வெளிப்படையாக பேசி செய்தியாளர்கள் சந்திப்பை களேபரப்படுத்தினார். நாங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்போம். காதல் என்ற பெயரில் திடீரென்று அவர்களை பிரித்துச் சென்றால் அது காதல் கிடையாது நாடகக்காதல் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கவுண்டம்பாளையம் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில பேசிய அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். அதாவது ஆவணக் கொலை என்பது கொலையோ வன்முறையோ கிடையாது. அது ஒரு விதமான அக்கறை என்று ஆவணப்படுகொலையை நியாயப்படுத்தி பேசினார். இந்த பேச்சு பலதரப்பினர் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. இதைத்தொடர்ந்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது கவலை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.
இந்நிலையில் ஆவணக்கொலை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு அளித்தனர். இது குறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.