Share via:
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62வது
பிறந்த நாளை அவரது கட்சியினர் பிரமாண்டமாகக் கொண்டாடிவருகிறார்கள். சீமான் திருமாவுக்கு
வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், அவரது கட்சியினர் மட்டும் தொடர்ந்து தாக்குதல்
நடத்திவருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன். பின்னர்
உதயநிதி ஸ்டாலின் நேரில் திருமாவை சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து உதயநிதி, ‘முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களால் ‘மேஜர் ஜெனரல்’ எனப் பாராட்டப்பட்டவரும் பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும்
சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக
கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம்’ என்று கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை என்று எதிர்க்கட்சி கூடாரத்தில் இருந்தும்
திருமாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் சீமானும், ‘தமிழ்ச்சமூக
மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின் அரசியல் பணியும், சமூகப்பணியும்
மென்மேலும் தொடர்ந்திட என்னுடைய பேரன்பினைத் தெரிவிக்கின்றேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம், சீமானின் கூடாரத்திலிருந்து அவரது தம்பிகள் தொடர்ந்து
திருமாவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து அவதூறு செய்துவருகிறார்கள்.
திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழா மேடையில்
பேசிய சினிமா கலைஞர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் சீமான் விடும் கதைகள் பற்றியும்
போலி தலைவர் என்றும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதை திருமாவளவன்
கை தட்டி ரசித்து சிரிக்கிறார். இதையடுத்தே திருமாவளவன் மீது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.
‘இது திருமா பிறந்தநாள் மேடையா? சீமானை விமர்சிக்கிற மேடையா? எங்கள்
அண்ணன் சீமானை ஒரு பெண் மூலம் விமர்சனம் செய்ய வைத்து ஒட்டுமொத்த அரங்கம்ம் கை தட்டி
ரசிக்கிறது. அதை தடுக்காமல் கை தட்டி ரசிக்கும் நீங்கள் உண்மையான தலைவரா என்று பலரும்
விமர்சனம் செய்கிறார்கள். ஜாதி வன்மத் தாக்குதலும் நடக்கிறது.
இது, மேடை விவகாரத்திற்கான தாக்குதல் அல்ல, நீண்ட நாட்களாக உள்ளுக்குள்
நடக்கும் புகைச்சல் இன்று அப்பட்டமாக வெடித்திருக்கிறது என்கிறார்கள்.