Share via:
தப்பிச்சென்ற பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.யின் துணிகர செயலை சென்னை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார்.
ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய பிரபல ரவுடி ரோகித் ராஜ் தப்பிக்க முயற்சி செய்தான். பிரபல ரவுடி சிவக்குமார் கொலை உள்ளிட்ட 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரோகித்ராஜ் தப்ப முயற்சி செய்த போது பணியில் இருந்த கலைச்செல்வி எஸ்.ஐ. ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளார். ரவுடி மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து காயமடைந்த ரவுடி ரோகித்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை துணிச்சலாக சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ. கலைச்செல்வியை, சென்னை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி எஸ்.ஐ.கலைச்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.