Share via:
அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சான்பிரான்சிஸ்கோ
விமான நிலையத்தில் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் லோக்கல் மேயர் கூட ஸ்டாலினை வரவேற்கவில்லை, எந்த நிறுவனம்
சார்பிலும் வரவேற்பு வழங்கப்படவில்லை என்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர்
டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ்கோவில்
இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க வாழ் தமிழர்கள் என்ற பெயரில் வரவேற்பு வழங்குவதற்காக
தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. பனியன் தொடங்கி நடனம் வரையிலும்
தி.மு.க. சார்பில் ரிகர்சல் செய்யப்பட்டதாம். எனவே, காசு கொடுத்து கூட்டிய கூட்டம்
இது என்று சமூகவலைதளங்களில் எக்குத்தப்பாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வர் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்வதால், குறைந்த
பட்சம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மேயர் அல்லது அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்திருக்க
வேண்டும். அதோடு ஸ்டாலினை வரவழைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் சார்பில் வரவேற்பு
கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் எல்லாமே செட்டப் என்று கிண்டல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி புலம் பெயர் தமிழர்களை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்.2-ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி
நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து முதல்வர் பேசுகிறார். செப்.7-ம் தேதி அமெரிக்காவில்
உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அமெரிக்காவிலும் தி.மு.க. மாநாடு தான் நடக்க போகிறது. உண்மை தெரியவேண்டும்
என்றால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.