Share via:
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 35 வயதான சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘மாணவியின் பெயரை மட்டும் தெரிவிக்காமல், அடையாளம் அனைத்தையும் வெளிப்படுத்தி தமிழக அரசு அம்பலப்படுத்திவிட்டது. விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அனுமதியில்லாமல் எப்படி என்.சி.சி. முகாமை நடத்த முடியும். பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளிக்கும் போது, ‘‘நடந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று பள்ளி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கேட்டுக் கொண்டதால் புகார் அளிக்கப்படவில்லை. அதில் ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஐ.ஜி. மேலும் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.