Share via:
ஆம்னி பேருந்துகளுக்கு சவால்விடும் வகையில் எக்கச்சக்க வசதிகளுடன் 150 அரசு பேருந்துகளை அமைச்சர் உதயநிதி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக, மத்திய பணிமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.எஸ்.வி.ஐ.150 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்புதிய பேருந்துகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக இப்பேருந்துகளில் பயணம் செய்ய முடியும். அதன்படி இந்தியாவிலேயே முதல்முறையாக சொகுசு பயணத்திற்காக ஏர் சஸ்பென்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 படுக்கைகளுக்கு இடையில் இடம் மற்றும் தடுப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பயணிகளின் பெட்டி, உடமைகள் உள்ளிட்டவை வைக்க போதிய இடவசதியும் இப்பேருந்துகளில் உள்ளது.
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் பிரத்யேகமாக தனித்தனியாக மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் மின்விசிறி அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுனர் இருக்கைக்கு அருகாமையில், அபாய ஒலி எழுப்பி அமைக்கப்பட்டுள்ளது. நடத்துனர் இருக்கைக்கு அருகில் ஒலிபெருக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.